மஜ்லிஸுல் புஹாரி ஷரீப் ஒர் சிறப்புப் பார்வை

தோற்றம்

தென்னிந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னோர்கள், இறை நேசர்கள் பலரால் உருவாக்கப்பட்ட பலப் பெருமையுடைய நிறுவனங்களும் உண்டு. ஆம் அதில் ஒன்று தான் பூமான் நபியின் புனித ஹதீது மணிமொழிகள் வாய் மணக்க ஓதி மகிழும் எழில் மன்று புனித பஹாரி ஷரீப்

துவக்க நிலை

காயல் நகரின் கல்விக் கடல் காருண்ணிய மாமேதை அல்லாமா பெரிய முத்து வாப்பா (ஒலியுல்லாஹ்) அவர்களின் மக்பரா ஷரீபில் வைத்து 1929ம் ஆண்டு இந் நிகழ்வு துவக்கப்பட்டது. அல்ஜாமிவுல் ஸஹீஹூல் புஹாரி எனும் புஹாரி ஷரீப் கிரந்தமதை ஓதப்பட்டு வந்தது. 1941ம் ஆண்டு அதற்கென புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. கால சூழலுக்கேற்ப இக்கட்டிடம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.

ஸ்தாபகர்கள்

1) அல்ஹாஜ் நூ.கு. முஹம்மது இப்றாஹீம் ஆலிம் அவ்லியா சாஹிப் (கலீபத்துஷ் ஷாதுலிய்யாஹ்)
2) நஹ்வி மு.க. செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம் முப்தி (முதர்ரிஸ் - மஹ்ழரத்துல் காதிரிய்யா)
3) மௌலவி அல்ஹாஜ் செ.இ. நூஹ் லெப்பை (வேலூர் ஆலிம் சாஹிப்)
4) அல்ஹாஜ் அல்ஹாபிழ் அ.உ. நூஹ் தம்பி லெப்பை ஆலிம்
5) க.மு.க. செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம்
6) முத்து தைக்கா சே.கு. முஹம்மது இஸ்மாயில் ஆலிம்

ரஹ்மதுல்லாஹி அலைஹிம் - ஆமீன்

இவர்கள் இந்த நிறுவனத்தின் ஸதாபகர்கள். இன்றும் என்றும் நம் நினைவில் வாழும் நல்லவர்கள். இவர்களின் மறைவிடங்களை இறைவன் ஒளிமயமாக்குவானாக!

துவக்கப்பட்ட காரணம்

அருள்மறை குர்ஆனிற்கு அடுத்து பூமான் நபியின் பொன்மொழிகள் மார்க்க அடிப்படைகளில் பிரத்தியோகமானது. அவகளை தொகுத்துத் தந்து இந்த சமூகத்தின் நன்றிக்கு பாத்தியப்பட்டோர் பலருண்டு. அன்னோர்களால் தொகுக்கப்பட்ட நபிமொழி திரட்டுகளில் தலைமை வகிக்கும் அல்ஜாமிவுஸ் ஸஹீஹ் புஹாரிஷ் ஷரீப் எனும் கிரந்தம் இந்த பொன்மொழிப் பேழை ஒரு ஊரில் ஓதப்பட்டால் அந்த பகுதியை தீமைகள் தீண்டாது, அல்லல்கள் அண்டாது, கொடிய நோய்கள் புறமுதுகு காட்டி ஓடி விடும். இது அனுபவப்பட்ட உண்மை. எனவே இக்கிரந்தமதை இவ்வூரில் ஓதச் செய்ய வேண்டும் என மேல் சொன்ன மேன் மக்கள் முடிவெடுத்து பெருமானாரின் பெருமன்றமாம் இந்த புனித புஹாரி ஷரீப் ஸபையை தோற்று வைத்தனர்.

நடைபெறும் காலம்

அல்லாஹ்வின் மாதம் என அருளப்பட்ட ரஜப் திங்கள் பிறை 1 துவக்கம் 30 முடிய புனித புஹாரி கிரந்தம் ஓதப்பட்டு அன்று ஓதப்படும் புஹாரி ஹதீதுகளுக்கு உலமாக்களால் விளக்கவுரை நிகழ்த்தப்படும்.

அபூர்வ துஆ வந்ததின் வரலாறு

புனித புஹாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்ததற்க்குப் பிறகு அதை வஸீலாவாகக் கொண்டு இறைவனிடம் வேண்டப்படும் புனித ஹத்முல் புஹாரி எனும் அபூர்வ துஆ பிரார்த்தனை- புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ அல்லாமா செய்யிது அஹ்மதிப்னு ஜெய்னி தஹ்லானி ரஹ்மத்துல்லாஹி அவர்களால் தொகுக்கப்படடது. அதை சங்கைக்குரிய இம்மஜ்லிஸில் போற்றுதலுக்குரிய பெருமகனார் நமது பாட்டனார் அல்ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷெய்குல் காமில் அல்லாமா முஹம்மது இஸ்மாயீலுன் நஹ்வி அவர்கள் புனித ஹரம் ஷரீஃபிற்கு சென்று அதன் விரிவுரையாளராக இருந்த அல்லாமா அஷ்ஷெய்கு அமீன் குத்பி அவர்களை சந்தித்து இந்த துஆவினை பெற்று வந்து அவர்களே ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். அன்று துவக்கம் இன்று வரை இந்த துஆ மஜ்லிஸ் சீரும் சிறப்புமாய் சிறப்புயர் ஆலிம் பெருமக்களால் பொருளுடன் ஓதப்பட்டு வருகிறது.

மத்ரஸா ஹாமிதிய்யா

இந்த புண்ணிய சபையில் நாள் தோறும் பல நற்பனிகள் நடந்தேறி வருகின்றன. அருகாமையில் அமைந்திருக்கும் குருவித்துறைப் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் ஹாமீது வலியுல்லாஹ் அவர்களின் பெயரைத் தாங்கி 'ஹாமிதிய்யா' எனும் கல்விக் கேந்திரம் இதன் சேய் சபையாக திகழ்கிறது.